Thursday, January 22, 2009

சினிமாவுக்கு எழுதச் சொன்னால்..


(01)

வாடிவாடி வடிவழகி!

வாடி வாடி வடிவழகி
வாய்த்த காதல் எழிலரசி
ஆடி ஆடும் நடையழகி
ஆலங் குயிலின் குரலழகி.. வாடி வாடி..

போட போடா புழுகாதே
புன்ன கைக்கும் அழகோனே
கூடல் ராமன் வீதிவந்து
கோலம் காட்டும் எழிலோனே! -போடபோடா

சாலையோரம் நீநடந்தால்
சந்தியெல்லாம் இறுகுதடி
வாலைக்குமரி வள்ளிபுலம்
வருகிறாயே பூங்குமரி.. -வாடி வாடி..

ஏறுபோலே நீநடந்தால்
இலவம்பஞ்சு மனம்பறக்கும்
ஆறுபோலே நீநடந்தால்
அகிலமெல்லாம் தூள்பறக்கும்.. -போடபோடா

மாதவியாள் போலவில்லை
மதுரைத்தீயின் கண்ணகியே
சோதனையில் தீக்குளிக்கும்
தேசமங்கை ஆரணங்கே.. வாடிவாடி

இருவரும்:
காதலிலே மூழ்கிநிற்போம்
காலமெல்லாம் தமிழினிப்போம்
சாதனையே காட்டிநிற்போம்
சரித்திரமாய் நிலைத்துநிற்போம்.. வாடிவாடி..போடபோடா

புதியபாரதியின் பாடலிது

Monday, January 12, 2009

தமிழே இசையைத் தான்தாங்கு!

(01)
தமிழே இசையைத் தான்தாங்கு!

எடுப்பு
தங்கத் தமிழே எனைத்தாங்கு-நீ
தானே இசையின் உயிர்ப்பாங்கு -தங்கத்
தொடுப்பு

முங்கிப் பொழியும் மொழியின் வெள்ளம்-நீ
முத்துப் புலவர் தாயின் உள்ளம் -தங்கத்

முடிப்பு

எங்கும் ஏற்றும் ஒளியின் சிதறல்-தமிழ்
இசைகள் கோர்த்த மணியின் கதிர்கள்
பொங்கு தமிழிற் பூக்கும் அருவி-இசைப்
புயலாய் மருவும் தென்றற் புரவி -தங்கத்

ஆசைக் கருக்கள் தேசக் குயில்கள்-பண்
ஆகிக் களித்து ஆடும் மயில்கள்
ஈசன் பாதம் இசையின் கீதம்-இந்த
இரண்டும் இணைக்கும் மொழியின் நாதம் -தங்கத்

புதியபாரதி.

(இசை ஏற்றபவர்கள் எழுதியவரையும் குறியுங்கள்)